கள்ளக்குறிச்சி,
பெண் கலெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேசுக்கு 11ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் (வயது 36). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு கடந்த ஜூலை மாதம் முதல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல், கலெக்டரை பின் தொடர்ந்து சென்று துன்புறுத்துதல் என பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கபட்ட பெண் கலெக்டர் தனது கணவரிடம் (அவரும் கலெக்டர்) கூறியுள்ளார். இது குறித்து பெண் கலெக்டரின் கணவர் தலைமை செயலாளரிடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை, பெண் கலெக்டருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சமூகவலைதளத்தில் பூதாகாரமான நிலையில் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐ.ஜி. காமினி கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணையை தொடங்கிய விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் பெண் கலெக்டரின் கணவர், பெண் கலெக்டர், தவெக எல்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பின்னர், பெண் கலெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேசை போலீசார் நேற்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள வீட்டில் வைத்து அருள் விக்னேசை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்றது. பின்னர், நள்ளிரவு கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி முன் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேசை டிசம்பர் 11 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.