தமிழக செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கோர்ட்டில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியதாகவும் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த வழக்கு தொடர்பாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் கடந்த 22-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இடைக்கால ஜாமீன்

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது எனக்கூறி இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இன்று விசாரணை

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நீதிபதி எஸ்.சுபாதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சில விளக்கங்களை கேட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.