சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின்போது 110 விதியின் கீழ் 3 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். அதில், ஒரு அறிவிப்பு பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்க ளாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் (கார்) வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதனால், அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சமர்பித்துள்ளேன். தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைபோல சி.பி.ஐ. உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்றும் கார் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு என எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கார் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசியதாவது:-
அமைச்சருக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் கொடுக்கப்படுகிறது; ஆனால் எம்எல்ஏக்களுக்கு அப்படி இல்லை; ஒரு எம்எல்ஏ மூன்று லட்சம் மக்களை சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது; அதனால்தான் கார் வழங்குகிறோம். எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு மூன்று வீடு உள்ளது ஆனால் அரசு பங்களாவில் இருக்கிறார். உங்களுக்கு சொந்த வீடு உள்ளதே எதற்கு அரசு பங்களா வேண்டும் என கேள்வி எழுப்ப முடியுமா?. என்றார்.