தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து திமுக ஆராய்ந்து வருகிறது.

சென்னை,

தேர்தல் தோல்வி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தை இழந்து எதிர்க்கட்சியானது. தேர்தல் தோல்விக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அக்கட்சி ஆராய்ந்து வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்த நிலையில் வருகிற 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-ம் தேதி (புதன்கிழமை) மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கவர்னர் உரை

இக்கூட்டத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும், தங்களுடைய தொகுதிகளின் தேவைகளை எப்படி எடுத்துக் கூற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள், சட்டசபையில் கவர்னர் உரை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.