தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நேற்று திண்டுக்கல்லில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது. ராகுல்காந்தி தலைமையில் இந்தியாவில் மாற்றம் நிகழும்போது, தமிழகத்துக்கான நியாயமான உரிமைகள் கிடைக்கும். இந்தியா முழுவதும் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதை சட்டம்-ஒழுங்குடன் தொடர்புபடுத்த கூடாது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 2 ஆண்டுகளிலும், இந்த ஆண்டும் நடந்த குற்றங்களின் விவரத்தை வைத்து ஒப்பிட வேண்டும். மேலும் குற்றங்களை தடுக்க முதல்-அமைச்சர் விஜய், நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகி ராம் மாதவ், தமிழ்நாடு பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் தமிழகத்தை மத ரீதியாக பிரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதற்கு பா.ஜனதாவுடன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. உதவியாக இருக்கிறது. அதனால் மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்து, முக்கிய நிர்வாகிகளே தோற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சதித்திட்டங்களை முறியடிப்போம்.முதல்-அமைச்சர் விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் இடையே 2009-ம் ஆண்டில் இருந்து உறவு உள்ளது. காங்கிரஸ் கட்சி, முதல்-அமைச்சருக்கு எப்போதும் துணையாக நிற்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு சமூகநீதி வெற்றி கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தோற்கடிக்கப்படும். தமிழக மக்கள், எங்கள் கூட்டணியுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய நூலக ஊழல் நடைபெற்று உள்ளது. 70 ஆயிரத்து 674 போலி புத்தகங்களை வைத்து ஒரு கம்பெனி வசூல் செய்துள்ளது. இந்த ஊழலை மறைக்க தி.மு.க. பல்டி அடிக்கிறது.ஒரு புத்தகம் 1,000 ரூபாய் என்று கணக்கிட்டால் எவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்கிறது. இந்த ஊழலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த நூலக ஊழலுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஊழல் தடுப்புத்துறை விசாரிக்க வேண்டும். இதை மடைமாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.