சென்னை,
பெரியார் - அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் - அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்-அமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் - அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்-அமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.