தமிழக செய்திகள்

தி.மு.க. மாநாட்டுக்கு மணல் எடுத்த விவகாரம்: எ.வ.வேலுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

எதிர்தரப்பு பதிலைக் கேட்காமல், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

சென்னை,

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “இதற்கு முன்பாக இதே இடத்தில் மூன்று முறை மாநாடு நடத்தப்பட்டது. உரிய அனுமதி பெற்றே மணல் எடுக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கற்பனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கவர்னரின் அனுமதி பெறாமல், இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில் வாதிடப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தாக்கல் செய்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், எதிர்தரப்பு பதிலைக் கேட்காமல், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார்.

SCROLL FOR NEXT