திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுவாக எம்.பி.க்கள் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே இந்தியா கூட்டணி கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். த.வெ.க.வுக்கு தற்போது எம்.பி.க்கள் இல்லாததால் வருங்காலத்தில் பங்கேற்பார்கள். இந்தியா கூட்டணியில் தி.மு.க. நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். நாட்டின் நலன் கருதி வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி கட்சியாக நீடித்தோம். நேற்று வரை புகழ்ந்து தள்ளிவிட்டு, இன்று கூட்டணி இல்லை என்றதும் விமர்சிப்பது முறையல்ல. கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியையும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசையும் எதிர்த்து போட்டியிட்டோம். ஆனால் அவர்கள் இந்தியா கூட்டணிக்கு வந்துவிட்டார்கள். அதே சூழல் தமிழகத்திலும் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.