சென்னை,
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
அப்போது பேசிய முதல்-அமைச்சர் விஜய், "நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி பாஜகவின் போஜராஜன் பேசுகையில், பரிசீலனையில் உள்ள மசோதா குறித்து அவசரப்பட்டு தீர்மானம் கொண்டு வருவதாக எதிர்ப்பு தெரிவித்தார்.
பாமக எம்.எல்.ஏ., கணேஷ் குமார் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா? வராதா? என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதல்-அமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும். மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராக பாமக ஒருபோதும் நிற்காது” என்று அவர் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு அவசரமாக தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தீர்மானத்தை எதிர்க்கும் அதேநேரம் மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவதை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை எனக்கூறி தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம் என 2024ம் ஆண்டே தீர்மானம் போட்டோம். இதன் ஆபத்தை விளக்கி தென் மாநில முதல்வர்களுக்கு எங்கள் தலைவர் கடிதம் எழுதி இருந்தார்.
DELIMITATION கொண்டுவந்தால் அது எவ்வளவு பெரிய பாதிப்பாக அமையும் என்பதை இந்தியாவுக்கே முதலில் சொல்லியவர் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
7 மாநில முதல்-மந்திரிகளுக்கு தொகுதி மறுவரையறை பற்றிய ஆபத்தை எடுத்து உரைத்து தி.மு.க. தலைவர் கடிதம் எழுதினார். Join Action Committee யை சென்னையில் உருவாக்கினோம். ஒருங்கிணைந்த செயல்திட்ட கூட்டத்தையும் எங்கள் தலைவர் நடத்தினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்த சட்டமன்றத்திலும் விளக்கி கூறினார். மசோதா நகலை எரித்து எதிர்ப்பை வெளிக்காட்டினோம்.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு திமுக தெரிவித்த எதிர்ப்பு தான் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தோல்வி அடைந்தது. மீண்டும் அந்த மசோதாவை தற்போது கொண்டு வர நினைக்கிறார்கள். நாங்கள் காட்டிய எதிர்ப்பு தான் மசோதா தோற்கடிக்கப்பட்ட காரணம். திமுகவை பொறுத்தவரை 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் 7.18% என்ற அளவில் இருந்து குறையக் கூடாது.
அரசினர் தனித்தீர்மானத்திற்கு திமுக வரவேற்கிறது. அரசு கொண்டு வந்த இரண்டு தீர்மானத்திற்கும் திமுக ஆதரவு தெரிவித்து வரவேற்கிறது” என்று கூறினார்.