தமிழக செய்திகள்

திமுகவில் இனி 110 மாவட்டச் செயலாளர்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக 16-வது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும் - பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.

அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், திமுக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

PR - 28082026.pdf
Preview

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகர கழக மாவட்டங்களின் அடிப்படையில், ஒன்றிய - பகுதி - பேரூர் - வட்ட கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.