தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுக்கு தி.மு.க. தக்க பதிலடி கொடுக்கும் - டி.கே.எஸ் இளங்கோவன்

திமுகவை பார்த்து ஆதவ் அர்ஜுனா சவால் விட்டு பேசுவது அநாகரீமானது என டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தி.மு.க.வுக்கு சவால் விடும் வகையில் இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும்போது தி.மு.க.வால் ஒரு மேயர் பதவியை கூட கைப்பற்ற முடியாது என்று பேசி இருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு கட்சியாக மாறி மாறி சென்றவர். இப்போது த.வெ.க.வுக்கு 'ஜால்ரா' தட்டுகிறார் அவ்வளவுதான். திடீர் பொறுப்புக்கு வந்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பதவியின் கண்ணியத்தை மறந்து ஒருமையில் சவால் விட்டு திமுகவை பார்த்து பேசுவது அநாகரீகமானது.

நீங்கள் நடத்துகிற ஆட்சியைப் பார்த்தால் அடுத்து கவுன்சிலராக கூட நீங்கள் வர முடியாது. ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டை அந்த அளவுக்கு சீரழித்து விட்டீர்கள்.

அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரும்போது எத்தனை பேர் ஜெயிப்பீர்கள் என்று பாருங்கள். 10 பேர் கூட தேற மாட்டீர்கள்.

பல தலைவர்களின் சவால்களைப் பார்த்த இயக்கம் தி.மு.க. உங்களைவிட பெரிய தலைவர்களான ஜெயலலிதா சவால்களை எல்லாம் பார்த்து முறியடித்த இயக்கம் தி.மு.க. எனவே தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. எழுந்து நிற்கும். மீண்டும் வெற்றி பெறுவோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுக்கு தி.மு.க. தக்க பதிலடி கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.