தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு - பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை

அ.தி.மு.க. கோட்டையாக இருந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் த.வெ.க. பேட்டையாக மாறிவிட்டது.

சென்னை,

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவையாக உள்ளது.

இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), கரூர் (கரூர் மாவட்டம்), விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்), திருச்சி கிழக்கு (திருச்சி மாவட்டம்) ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன.

இதில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பொதுவாக, இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்பதால், 4 மாத கால த.வெ.க. ஆட்சி மக்களை திருப்திபடுத்தியதா?, அல்லது அதிருப்தியடையச் செய்ததா? என்ற கேள்விகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

த.வெ.க.வுக்கு தேவையான வெற்றி

தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சியே வாகை சூடியிருக்கிறது. ஆட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்றாக கருதி அந்த வெற்றியை ஆளுங்கட்சியினர் கொண்டாடினார்கள்.

அதுபோன்ற நிலையே தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிரொலித்து இருக்கிறது. ஆனாலும், இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. காரணம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இன்னும் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை.

கூட்டணி ஆட்சியைத்தான் தொடர முடியுமா?

தேவை 118 ஆக இருக்க, த.வெ.க. தற்போதைய நிலையில் 109 இடங்களையே கைப்பற்றி இருக்கிறது. இன்னும் பெரும்பான்மையை பெற அக்கட்சிக்கு 9 இடங்கள் அவசியம். தமிழகத்தில் இன்னும் 5 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதில் அனைத்திலும் த.வெ.க. வெற்றி பெற்றாலும்கூட, அக்கட்சிக்கான இடங்கள் சட்டசபையில் 114 ஆகத்தான் அதிகரிக்கும். அப்போதும், 4 இடங்கள் த.வெ.க.வுக்கு தேவையாகத்தான் இருக்கும்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, த.வெ.க. கூட்டணி ஆட்சியைத்தான் தொடர முடியும் என்ற நிலை இருக்கிறது. என்றாலும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலைவிட தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க.வின் செல்வாக்கு சற்று அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

அன்று அ.தி.மு.க.... இன்று த.வெ.க....

ஏனென்றால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, மதுராந்தகம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 62,090 வாக்குகள் கிடைத்தன. அன்றைக்கு அ.தி.மு.க. வேட்பாளராக களம் கண்ட மரகதம் குமரவேல் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிட்டு 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதேபோல், பொதுத்தேர்தலின்போது தாராபுரம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 46,438 வாக்குகள் கிடைத்தன. அன்றைக்கு அ.தி.மு.க. வேட்பாளராக களம் கண்ட சத்யபாமா இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிட்டு 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

த.வெ.க. பேட்டையாக மாறிய இரு தொகுதிகள்

இப்படி, அ.தி.மு.க. கோட்டையாக இருந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகள் இப்போது த.வெ.க. பேட்டையாக மாறிவிட்டது. தி.மு.க. 2-வது இடம் பிடித்த நிலையில், அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் பெரும் சரிவை சந்தித்து, 2 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் டெபாசிட் இழந்த அதே நேரத்தில், 1,000 ஓட்டுகளை கடக்கவே பல சுற்றுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

எது எப்படியோ, 2 தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. அடுத்து நடைபெற உள்ள 5 தொகுதி இடைத்தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT