சென்னை,
தேர்தலில் திமுகவின் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது;
தவெக ஆட்சிப் பொறுப்புயேற்றபிறகு தமிழ்நாட்டு பெண்களுடைய நிலை என்ன என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை எல்லாம் கடந்து வந்திருக்கோம். அதையும் தாண்டிய ஒரு ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையை இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய பெண்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
நம்முடைய அண்ணன் கொண்டுவந்த பிங்க் பட்ரோல் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஓட்டி சிங்கம் பெண் படை என்று அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் காப்பி அடிக்கிறது தப்பே கிடையாது. உண்மையில் நமது ஆட்சியைப் பார்த்து காப்பி அடிக்காத மாநிலமே கிடையாது.
நம்முடைய திட்டங்களால், இந்தச் சமூகத்தில் ஒரு பெண் வெளியில் வந்து இயங்குவது எளிதாகியுள்ளது. நாம் வெளியில் வந்து இயங்க ஆயிரம் தடை இருக்கும். அதில் முக்கியமானது பொருளாதார சுதந்திரம். யாரிடமும் காசு வேண்டும் என நிற்காமல் நாம் நினைத்தை இடத்தையும், இலக்கையும் அடைய விடியல் பயணம் திட்டம். மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாய் சகோதரிகளுடைய உழைப்பை அங்கீகரிக்க செய்த்து.
தேர்தலில் வாக்குகள் மாறலாம். ஆனால், சமூகத்தை மாற்றி அமைத்திருக்கக்கூடிய ஆட்சி என்றால் திராவிட முன்னேற்றக் கழகமாகத்தான் இருக்கும். அந்த ஆட்சியின் தலைவராக இருந்தவர் நம்முடைய முன்னாள் முதலமைச்சர். நம் வீட்டில், கழக ஆட்சியால் வந்த மாற்றங்களை நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர மறந்து விட்டோம்.
நம்ம பிள்ளைங்கள அடுத்த தலைமுறையை அரசியல் படுத்துங்கள். வீட்டில் அரசியல் பேசுங்கள், சமூக ஊடகங்களில் இயங்குவது முக்கியம். ஆனால், வீட்டில் இருக்கும்போது பிள்ளைகளோடு, பக்கத்தில் இருக்கக்கூடிய சகோதரிகளோடு, உறவினர்களோடு அரசியல் பேசுங்கள். இந்தச் சமூகத்தை அரசியல் படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
அரசியல் படுத்தப்பட்ட ஒரு சமூகம் எந்த முடிவு வேண்டுமாலும் எடுக்கட்டும். ஆனால், அரசியல் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது. இந்த 70 ஆண்டு காலமாக நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகள் இந்தச் சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பதை சொல்லவேண்டும். இந்த சமூகத்தில் எத்தனை பேர் படித்தார்கள், எத்தனை பேர் வேலைக்குப் போகிறார்கள். எத்தனை பேர் இந்தச் சமூகத்தில் மரியாதையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பெண்கள் பொருளாதார விடுதலையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பெண்களுக்குச் சொத்தில் உரிமை இருக்கிறது என்ற சூழலை நாம் உருவாக்கித் தந்திருக்கிறோம்.
இதற்கு முன்பிருந்த போராட்டங்கள் அதைச் செய்வதற்கு நம்முடைய தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்களை தயவு செய்து அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தாருங்கள். அவர்களுக்கும் இந்த வரலாற்றை எடுத்துப் போய் சேருங்கள். அப்படி சேர்த்தால் தான் அடுத்த தலைமுறை சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமுறையாக உருவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.