தமிழக செய்திகள்

‘மாநில சுயாட்சிக்கான தி.மு.க.வின் போராட்டம் தொடரும்’ - மு.க.ஸ்டாலின்

இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றுவதற்கு ஒரு விரிவான மறுஆய்வு அவசியமாகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி ‘அரசியலமைப்பு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

அரசியலமைப்பு தினம்

“1949-ம் ஆண்டு இதே நாளில், பல நூற்றாண்டுகளாக ஏற்றத்தாழ்வுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சமூகத்தில், சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளித்து, சமூக நீதிக்கு அடித்தளமிட்ட, குறிப்பிடத்தக்க முற்போக்கான ஒரு அரசியலமைப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், நமது அரசியலமைப்பை, சமூகத்தின் மாறிவரும் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் பரிணமிக்கக் கூடிய ஒரு உயிருள்ள ஆவணமாகக் கருதினார்.

கூட்டாட்சி

நமது அரசியலமைப்புப் பயணத்தின் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றுவதற்கு ஒரு விரிவான மறுஆய்வு அவசியமாகிறது. இந்த நோக்கத்துடன்தான், நமது திராவிட மாடல் அரசு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை அமைத்தது.

தி.மு.க.வின் போராட்டம் தொடரும்

தற்போதைய ஆட்சியாளர்கள் இக்குழுவைக் கலைக்க திட்டமிட்டாலும், மாநில சுயாட்சி மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இந்த அரசியலமைப்பு தினத்தில், நமது அரசியலமைப்பின் முற்போக்கான லட்சியங்களைப் பாதுகாக்கவும், அதன் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தவும் நாம் உறுதி எடுப்போம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT