தமிழக செய்திகள்

கரூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ தேர்வினை 14,662 பேர் எழுதினர்.

கரூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ தேர்வினை 14,662 பேர் எழுதினர்.

கரூர், 

குரூப்-2, 2 ஏ தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, II A (குரூப்-2, 2 ஏ) பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி குரூப்-2, 2 ஏ தேர்வினை எழுத கரூர் மாவட்டத்தில் 17,114 பேர் விண்ணப்பித்திருந்தனர். கரூர் மாவட்டத்தில் 59 மையங்களில் குரூப்-2, 2 ஏ தேர்வு நேற்று நடந்தது.

உடல் வெப்பநிலை

தேர்வு எழுத மையத்திற்கு வந்தவர்களுக்கு முதலில் சுகாதார பணியாளர்கள் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதித்தனர். பின்னர் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கினர். மேலும் தேர்வாளர்களில் முககவசம் அணிந்தவர்களை மட்டும் தேர்வு அறைக்கு செல்ல அனுமதித்தனர். தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை காலை 8.59 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர்.

அதற்கு மேல் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வாளர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்

14,662 பேர் எழுதினர்

சரியாக 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில் 17,114 பேரில், 14,662 பேர் தேர்வினை எழுதினர். 2,452 பேர் தேர்வு எழுதவரவில்லை.தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

8 பறக்கும் படை குழுக்கள்

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம் 59 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மைய கண்காணிப்பு பணிக்காக சப்-கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 8 பறக்கும்படை குழுக்களும், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 15 நடமாடும் குழுக்களும் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 101 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்


மேலும் பாதுகாப்பு பணிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டனர். மேலும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு செல்ல கரூர் மற்றும் குளித்தலையில் இருந்தும் அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT