தூத்துக்குடி,
சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப் பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்தி இடம் பெற்றதை கண்டித்துள்ள முக. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என்று பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப் பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து இந்தியிலும், 3-வதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெரியளவில் எழுத்துகள் இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.மாநில அரசு வைத்த பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கடும் எதிர்ப்பையடுத்து சாலை வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.