சென்னை,
பிளஸ்-2 பொதுத் தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 654 பேர் மட்டும் தேர்வை எழுதியுள்ளனர். இதன்படி, பார்க்கையில் 8 ஆயிரத்து 38 பேர் தேர்வை எழுதவில்லை. ஆனால் தேர்வுத் துறை வெளியிட்டு இருந்த செய்திக் குறிப்பில் 7 ஆயிரத்து 874 பேர் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தேர்வு எழுதாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. உதாரணமாக கடந்த 2024-ம் ஆண்டில் 11 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் எழுதாமல் இருந்தனர். கடந்த ஆண்டில் (2025) 10 ஆயிரத்து 49 பேர் தேர்வை எழுதவில்லை. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 874 ஆக குறைந்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை தொடர்ந்து தேர்வு எழுதாமல் தவிர்க்கும் மாணவ-மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களை தேர்வு எழுத ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் விளைவாகத்தான் இந்த எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.