தமிழக செய்திகள்

“முடிவுகளை எடுத்துவிட்டு எதிர்ப்பு வந்ததும் திரும்ப பெறுவதா?” - அண்ணாமலை கேள்வி

முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

முடிவுகளை எடுத்துவிட்டு எதிர்ப்பு வந்ததும் திரும்ப பெறுவதா என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக அரசு

தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்ப பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. முதல்-அமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆர்.டி.ஐ விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.

முக்கிய முடிவுகள்

இந்த ஒவ்வொரு முடிவும் முதல்-அமைச்சர் விஜயின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா? அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

வலியுறுத்தல்

ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT