தமிழக செய்திகள்

நேரில் செல்லாமல் ஆவணப்பதிவு.. புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக பத்திர பதிவுத்துறை

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இணையவழியாக ஆவணங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பத்திர பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இணையவழியே ஆவணப்பதிவு

ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24x7x365) இணையதளத்தின் மூலம் தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆவணப்பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு வாட்ஸ்-அப் (Whatsapp) மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடைமுறை "வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration) விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:-

அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)

ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு(Fret sale of Flat)

இ) தமிழ்நாடு விட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்

ஈ) வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள்

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வழக்கறிஞர்கள்

1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே மேற்படி ஆவணங்களை(இரசீது) இணையவழியில் உருவாக்கி சமர்ப்பிக்கலாம்.

2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்யவேண்டும்.

3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப தேவைகள்

1. இணைய இணைப்பு

2. UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி

3. புகைப்படக் கருவி (Webcam)

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:-

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.