சென்னை,
தமிழகத்தின் வருவாயில் பெரும் பங்கு பத்திரப்பதிவுத்துறையின் மூலம் கிடைத்து வருகிறது. அதன்படி, ஆண்டுதோறும் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வரை வருமானம் ஈட்டப்படுகிறது.
பத்திரப்பதிவுக்கு முன்பு பத்திரங்கள் தொடர்பான விவரங்களை பத்திர எழுத்தரிடம் தெரிவித்து, பத்திரங்கள் எழுதி சார்பதிவாளர் முன்பு அவற்றை பதிவு செய்யவேண்டும். இத்தகைய பணிகள் காரணமாக இந்த துறையில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாகவும், காலதாமதங்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பத்திரங்களை எழுதுவதற்கு என்றே உரிமம் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் முறையாக தேர்வு எழுதி, இந்த உரிமங்களை பெற்றுள்ளனர். கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு இந்த தேர்வு என்பதே நடத்தப்படாமல் உள்ளது.
இதனிடையே பத்திரப்பதிவுத்துறையில் ‘ஸ்டார் 3.0' என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் இ-ஹப் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின்படி, ஒரே இடத்தில் அதிநவீன வசதிகளுடன் அனைத்து வகையான பத்திரப்பதிவு சேவைகளையும் பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க சேவை மையங்கள் (இ சேவை மையம் போன்று) ஏற்படுத்தப்பட உள்ளன.
இங்கிருந்து பத்திரப்பதிவு செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பத்திரங்கள் பதியலாம். இதற்காக, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு மாவட்டத்தில் உள்ள சொத்துகளை எங்கிருந்தாலும், உரிய ஆவணங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ளலாம்.
இதனால், பொதுமக்கள் பத்திரப்பதிவு மையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக, அதிவேக வை-பை, டிஜிட்டல் டோக்கன் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், சேவை கட்ட ணமாக ரூ.2 ஆயிரமும், தட்கல் திட்டத்தில் ரூ.5 ஆயிரம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த திட்டத்தை சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தவும், அதன்பின், பிற மாவட்டங்களில் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான டெண்டர் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கு பத்திர எழுத்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இ-ஹப் திட்டம் அமலுக்கு வரும்போது, பத்திரம் எழுதும் ஒப்பந்த பணியை சாதாரண பத்திர எழுத்தர்கள் பெருந்தொகை கொடுத்து ஏலம் எடுக்க முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அதை செய்ய முடியும்.
தற்போது பத்திரம் எழுதுபவர்கள் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக உள்ளனர். தனியாருக்கு இந்த பணியை வழங்கினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குறிப்பாக இந்த பணியில் பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள், பத்திர நகல் எழுதும் அலுவலக பணியாளர்கள், பத்திரம் மற்றும் ஸ்டாம்ப் விற்பனையாளர்கள் என லட்சக்கணக்கானோர் வாழ் வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6-ந்தேதி முதல் தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தர் மாநில சங்கத்தினர் கவனஈர்ப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். பத்திரம் தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் டெண்டரை தமிழக அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தினர். 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதுதொடர்பாக, பத்திர எழுத்தர்கள் கூறும்போது, பத்திரங்கள் தொடர்பான பணியை தனியாருக்கு மாற்றும்பட்சத்தில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. பத்திரம் எழுதுவதற்கு ஆகும் செலவும் அதிகமாகும். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.