சென்னை,
பருவநிலை மாற்றத்தால் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களுக்கும், பவளப்பாறைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய நிபுணர் குழு வர உள்ளது.
தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைதான், மிக நீண்டதாக உள்ளது. மீன்பிடி தொழிலை பிரதானமாக கொண்ட இந்த மாவட்டத்தில். மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த வாழிடமாக மன்னார் வளைகுடா கடல் பகுதி விளங்குகிறது. குறிப்பாக பாம்பன் குந்துகால் அருகே உள்ள சிங்கிலி தீவு, குருசடை தீவு முதல் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன.
இந்த தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரகங்களில் பவளப்பாறைகள், ஆமை, டால்பின், கடல்பசு, கடல் குதிரை, உள்ளிட்ட 3,600 வகையான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு எல்நினோ பாதிப்பால் பருவநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேசிய கடல்சார் பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் மன்னார் வளைகுடா கடல் பகுதி, 10 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இதில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இதில் 14 தீவுகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும், 7 தீவுகள் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியிலும் உள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் குச்சி வடிவம், மூளை வடிவம், மலைக்குன்று வடிவம் என 134 வகையான பவளப்பாறைகள் உள்ளன.
அதேபோல் எல்நினோ தாக்கத்தால் மன்னார் வளைகுடாவில் கடல்வாழ் உயிரினங்களுக்கோ, பவளப்பாறைகளுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இது குறித்து ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற சிறப்பு நிபுணர்கள் குழுவினர் வந்து ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த குழுவினர் வர உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் ஆமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கு பிறகுதான் தெரியவரும். ஆமைகள் முட்டையிடும் சீசன் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும். ஆமைகள் முட்டையிட்டு வருவதை வைத்து பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கண்ட றிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.