கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அமைச்சர் நிர்மல்குமாரின் இந்து விரோத கருத்தை ஆமோதிக்கிறாரா முதல்வர்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், "திருப்பரங்குன்றம் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைபிடிப்போம்" என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

மாற்று சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இந்து விரோத திமுகவின் சதிச் சுவடுகளையே பின்பற்றுவோம் என்று இன்று தவெக அமைச்சர் அறிவித்திருப்பது, தவெக ஒரு ஏமாற்று சக்தி என்பதையே நிரூபிக்கிறது. இந்து மக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அமைச்சரின் இந்தக் கருத்தை முதல்-அமைச்சர் விஜய் ஆமோதிக்கிறாரா? இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் விதமாக, ஐகோர்ட்டு தீர்ப்பை அவமதிக்க போகிறாரா? தீய சக்தி திமுகவுக்கும் "தூய சக்தி" தவெகவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா?

முதல்வர் விஜய் வழக்கம்போல இதற்கும் வாய் திறக்காமல் இருப்பதை விடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.