தமிழக செய்திகள்

‘பா.ஜ.க.வை எதிர்க்கும் கொள்கை உறுதியும், துணிவும் விஜய்யிடம் உள்ளதா?’ - ஆளூர் ஷா நவாஸ் கேள்வி

கவர்னரை கண்டிக்க த.வெ.க. அஞ்சுகிறது என ஆளூர் ஷா நவாஸ் விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இந்த நிலையில், த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்காதது தொடர்பாக கவர்னருக்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் கவர்னர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது த.வெ.க.

இதுவே 108 எண்ணிக்கை தி.மு.க.விடம் இருந்து, கவர்னர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் கவர்னர் உரையின்போது ஆர்.என்.ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும்.

கவர்னரை எதிர்ப்பது என்பது பா.ஜ.க.வை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜய்யிடம்?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.