தமிழக செய்திகள்

நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை துரத்திய வளர்ப்பு நாய்

கரடி அங்கிருந்து தேயிலை தோட்டத்தின் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது.

நீலகிரி,

நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை, வளர்ப்பு நாய் ஒன்று உயிரை பணயம் வைத்து வீரத்துடன் துரத்தியடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி ஒன்று, சாவகாசமாக இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அலறிய மக்கள்... பாய்ந்த நாய்

தெருவில் கரடி உலா வருவதை பார்த்த பொதுமக்கள், பயத்தில் அலறியடித்து கொண்டு தங்களது வீடுகளுக்குள் ஓடி உடனே கதவுகளை பூட்டிக்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் இருந்த வளர்ப்பு நாய், கரடியை பார்த்ததும் ஆக்ரோஷமாக குரைக்க தொடங்கியது. கரடி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், நாய் சற்றும் அஞ்சவில்லை. கரடியை நோக்கி நேருக்கு நேர் சீறியது.

ஓட்டம் பிடித்த கரடி

நாயின் சத்தத்தை கேட்டு தைரியம் வரப்பெற்ற பொதுமக்களும் சத்தம்போட்டு கரடியை விரட்ட முயன்றனர். வளர்ப்பு நாயின் அசாத்திய வீரத்தாலும், மக்களின் சத்தத்தாலும் நிலைகுலைந்த கரடி, அங்கிருந்து தேயிலை தோட்டத்தின் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது.

பொதுமக்கள் கோரிக்கை

நாய் கரடியை விரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. "நல்லவேளை, அந்த நாய் இருந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது" என நிம்மதி பெருமூச்சு விடும் அப்பகுதி மக்கள், "சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.