தமிழக செய்திகள்

குடத்துக்குள் தலை சிக்கியதால் பரிதவித்த நாய்: தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

திருச்சி மாவட்டம், வெள்ளைபூலாம்பட்டியில் ஒரு வீட்டின் முன்பு சில்வர் குடத்தில் சிறிதளவே தண்ணீர் இருப்பதை கண்ட தெருநாய் ஒன்று அதனை குடிப்பதற்காக தலையை குடத்திற்குள் நுழைத்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் குடத்துக்குள் தலை சிக்கியதால் பரிதவித்த நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் தாகத்துடன் சுற்றித்திரியும் நாய்கள் எங்கு தண்ணீர் கிடந்தாலும் அதனை பருக தவறுவதில்லை.

நாயின் தலை குடத்துக்குள் சிக்கியது

இந்த நிலையில் வெள்ளைபூலாம்பட்டியில் ஒரு வீட்டின் முன்பு சில்வர் குடத்தில் சிறிதளவே தண்ணீர் இருப்பதை கண்ட தெருநாய் ஒன்று அதனை குடிப்பதற்காக தலையை குடத்திற்குள் நுழைத்தது. தண்ணீரை குடித்து முடித்ததும் மீண்டும் தலையை வெளியே எடுக்க முயன்றபோது முடியவில்லை. குடத்துக்குள் நாயின் தலை வசமாக சிக்கிக்கொண்டது. இதனால் நாய் குரைத்துக்கொண்டே குடத்துடன் அங்குமிங்கும் ஓடியபடி பரிதவித்தது. இதைக்கண்டு பரிதாபப்பட்ட அப்பகுதியினர் நாயை பிடித்து குடத்தை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பொதுமக்களின் பலகட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

தீயணைப்பு வீரர்களுக்கு தகவல்

இதனால் நாயை அப்படியே விட்டால் தெருக்களில் சுற்றித்திரிந்து அவதிப்படும் என்று கருதிய பொதுமக்கள், நாயை ஒரு மரத்தில் கட்டி வைத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நாயின் தலையில் சிக்கிய குடத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

குடத்தை வெல்டிங் எந்திரம் மூலம் துண்டித்தால் நாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் எந்தவித உபகரணமும் பயன்படுத்தாமல், சிறிதுநேர போராட்டத்துக்கு பின் நாயின் தலையில் சிக்கிய குடத்தை லாவகமாக எடுத்தனர். பத்திரமாக மீட்கப்பட்ட நாய் நன்றியுணர்வோடு அங்கிருந்தவர்களை உரசிக்கொண்டு வாலை ஆட்டியப்படி சென்றது. நாயின் தலையில் சிக்கிய குடத்தை லாவகமாக எடுத்த தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். நாயின் தலையில் குடம் சிக்கியதும், அதனை மீட்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.