தமிழக செய்திகள்

ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை: ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார்

சென்னை நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் நாய்கள் கருத்தடை மையம் மருத்துவமனை கட்டிடமானது தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் 1,408 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.7.87 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார்.

ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-158க்குட்பட்ட நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் இன்று (22.8.2026) திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் சந்திரன், கவுன்சிலர் பாரதி, மண்டல அலுவலர் முருகதாஸ், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் கமால் உசைன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1,408 சதுர மீட்டர் பரப்பளவு

இந்த நாய்கள் கருத்தடை மையம் மருத்துவமனை கட்டிடமானது தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் 1,408 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் செல்லப் பிராணி மருத்துவமனை, நிர்வாக அறை, கால்நடை மருத்துவர் அறை, மருத்துவர்கள் அறை, இருப்பு அறை, மீட்பு அறை, கண்காணிப்பு அறை, சமையலைறை, காத்திருப்பு அறை, மருந்தகம், ஆய்வகம், பழுது பார்ப்புப் பிரிவு, மின் அறை, 2 அறுவை சிகிச்சை அரங்கம், கிருமி நீக்கச் சேவைப் பிரிவு அறை, கவச உடை அணியும் அறை, கழுவுமிடம், பொறுப்பு மருத்துவர் அறை, மண்டல கால்நடை மருத்துவர் அறை, மருத்துவப் பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், அப்பகுதியில் உள்ள அமைந்துள்ள நவீன மாடுகள் காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாடுகள் மற்றும் காப்பகத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

11 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம்

தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக புளியந்தோப்பு, லாய்ட்ஸ் காலனி, கண்ணம்மா பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், மணலி மண்டலத்தில் செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டத்தில் செட்டிமேடு, கண்ணப்பர் திடல் ஆகிய 11 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கத்தில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திப்பட்டு, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் பயோ சி.என். ஜி. பிளான்ட் பகுதி என மூன்று இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையம்

பெருங்குடியில் உள்ள நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் தற்காலிகமாக நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகமாக செயல்பட்டு வருகிறது. மணலி மற்றும் பெருங்குடியில் நோயினால் பாதிக்கப்பட்ட தலா 250 நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், புளியந்தோப்பு மற்றும் லாய்ட்ஸ் காலனி ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடைபெற்று வருகின்ற 3 நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தின் பணிகளையும் விரைந்து முடித்திடவும், தெரு நாய்களை கட்டுப்படுத்துகின்ற வகையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 முதல் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், அனைத்து தெரு நாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசியினை செலுத்தி நூறு சதவீதம் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளததை உறுதி செய்திடவும் செல்லப் பிராணிகளுக்கான உரிமங்களை விரைந்து வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.