நீலகிரி,
ஊட்டி அருகே உள்ள மஞ்சூர் பஜார் பகுதியில் பூனையை வேட்டையாட வந்த சிறுத்தை, பூனை தப்பியதால் அங்கிருந்த நாயை கவ்விச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மஞ்சூர் பஜார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று மஞ்சூர் பஜார் பகுதிக்குள் புகுந்துள்ளது.
பஜார் வீதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை, அங்கிருந்த பூனை ஒன்றை வேட்டையாடப் பாய்ந்துள்ளது. ஆனால், சிறுத்தையின் பிடியில் சிக்காமல் பூனை அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடியது. இதனால் ஏமாற்றமடைந்த சிறுத்தை, சாலையில் நின்று கொண்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்றை ஆக்ரோஷமாகக் கவ்விக்கொண்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
சிறுத்தை பஜார் பகுதிக்குள் நடமாடுவதும், நாயைக் கவ்விச் செல்லும் பரபரப்பான காட்சிகளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாத இறுதியிலும் இதே பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட நிலையில், நாயை வேட்டையாடிச் சென்றுள்ளதால் இரவு நேரங்களில் வெளியே செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.