சென்னை:
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று அதிகாலை மாநகராட்சி மற்றும் மாநிலக் கட்டுப்பாட்டு அறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநிலக் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் அதிகாலை 2.30 மணியளவில் அவர் ஆய்வு செய்தார். அப்போது, மழை பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பாரிமுனை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காகக் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் மற்றும் புகார்கள் குறித்து 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 முகாம்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பெய்திருப்பது சாதாரண மழை அல்ல. வெறும் 8 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில், மழை முடியும் வரை தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பழைய கட்டிடங்கள் தொடர்பான கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய கட்டிடங்களில் வசிப்பவர்களை மழைக்காலம் முடியும் வரை பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.