தமிழக செய்திகள்

உயர்மட்ட தலைவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை... ராஜினாமா கடிதத்தில் அண்ணாமலை பரபரப்பு தகவல்கள்

மக்கள் சோர்வடைந்து, ஒரு மாற்றத்தை விரும்பினர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய அண்ணாமலை அந்த கட்சியிலிருந்து வெளியேறியது ஏன்? என்பது பற்றி, தனது ராஜினாமா கடிதத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பிரதமர் நரேந்திர மோடி யின் தலைமையால் உத்வேகம் பெற்று, தமிழ்நாட்டில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரவும், மாநிலத்தில் அரசியல் நடத்தப்படும் விதத்தை மேம்படுத்தவும் நாடி, 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். மிக முக்கியமாக, அரசியல் என்பது மேட்டுக்குடியினருக்கும் ஒரு சிலருக்கும் மட்டுமேயான பாதை, சாமானிய மக்களுக்கானது அல்ல என்ற எண்ணத்தை நான் மாற்ற விரும்பினேன்.

மிகவும் இளம் மற்றும் அனுபவமற்ற என் மீது நம்பிக்கை வைத்து, பெரும் பொறுப்புகளையும் தலைமைப் பதவிகளையும் வழங்கிய பா.ஜ.க. தலைமைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 10 ஆண்டுகளாக நிலவி வந்த பொதுவான அரசியல் போக்கினால் மாநில மக்கள் சோர்வடைந்து, ஒரு மாற்றத்தை விரும்பினர்.

கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை அந்த மாற்றம் வந்தபோதிலும், அவற்றால் நிலைத்து நிற்க முடியாமல் மக்களின் நினைவிலிருந்து விரைவாக மறைந்துவிட்டன. தேசிய கட்சிகள், தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் ஒருபோதும் பேசியதில்லை. இந்த நம்பிக்கையை மாற்ற நான் முயன்றிருக்கிறேன். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பல ஏற்பட்ட இடையூறுகள் தடைகள், மற்றும் தடங்கல்கள் இருந்த போதிலும், அதில் கணிசமான வெற்றியையும் கண்டிருக்கிறேன்.

பிராந்திய அபிலாஷைகளில் ஆழமாக வேரூன்றிய ஒரு தேசியவாதியாக, எனது மொழியின் செழுமை, எனது கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் எனது பிராந்தியத்தின் தனித்துவமான பாரம்பரியம் ஆகியவற்றில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஒரு வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியா, அதன் பல பிராந்தியங்கள் சமூகங்களின் வலிமை, கண்ணியம் மற்றும் அபிலாஷைகளின் மீதுதான் கட்டமைக்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் அவ்வப்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த நோக்கங்கள் மற்றும் கவலைகளுக்கு நீங்கள் அளித்து வரும் அசைக்க முடியாத ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில், கடந்த 18 மாதங்களாக உயர்மட்டத் தலைவர்களுடன் நான் நடத்திய பல உரையாடல்களையும், நான் வெளிப்படுத்திய கருத்து வேறுபாடுகளையும் நினைவு கூர்கிறேன்.

தமிழ்நாட்டில் கூர் வளர்ச்சி சார்ந்த மற்றும் வேரூன்றிய பண்பாட்டு அரசியலுக்கான எதிர்காலப் பாதை குறித்த எனது தற்போதைய எண்ணங்களைக் கொண்டு உயர்மட்டத் தலைவர்களுக்கு நான். மேலும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை. நமது மூத்த தலைவர்களுடனான எனது உரையாடல்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நமது கருத்துக்கள் ஒத்துப்போகவில்லை என்ற முடிவுக்கு நான் வந்து உள்ளேன்.

நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் கட்சியிலிருந்து விலகி, அரசியலில் நுழைந்த தன் உண்மையான நோக்கத்தைப் பற்றிச் சிந்தித்து, எதிர்காலத்தில் என் போக்கில் பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நம்புகிறேன். எனது அமைப்பு ரீதியான பொறுப்புகளிலிருந்து உடனடியாக என்னை விடுவிக்குமாறும், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.