நெல்லை,
தென் மாவட்டங்களில் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரட்டை ரெயில் பாதை திட்டம் தொடங்கப்பட்டது. நாகர்கோவில்-சென்னை இடையே பணிகள் முடிந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுண் முதல் திருவனந்தபுரம் வரை பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பலனாக தற்போது நாகர்கோவில் டவுண் முதல் இரணியல் வரையிலான சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி, மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் ரெயில்களை இயக்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக வருகிற 31-ந் தேதிஅதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்த ரெயில்வேத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெ றும். முதலில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் சிக்னல் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, அதிவேக என்ஜின் அல்லது சிறப்பு ரெயில் மூலம் குறிப்பிட்ட வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்படும்.
கூடுதல் ரெயில்கள்
ஒற்றை ரெயில் பாதையாக இருந்தவரை, ரெயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல ரெயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இரட்டை பாதை மூலம் இந்த தாமதம் தவிர்க்கப்படும். பாதை திறன் அதிகரிப்பதால், எதிர்காலத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்களை இயக்க வழிவகை ஏற்படும். தென் தமிழகத்திலிருந்து கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் தடையின்றி விரைவாக செல்ல முடியும்.
சோதனை ஓட்டம் நடைபெறும் நாட்களில், தண்டவாள பகுதியில் பொது மக்கள் யாரும் நுழைய வேண்டாம் என்றும், கால்நடைகளை அவிழ்த்து விட வேண்டாம் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு. பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைத்தவுடன் ஓரிரு வாரங்களில் இந்த பாதையில் அதிகாரப்பூர்வமாக ரெயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் 31-ந் தேதி வரை பல்வேறு ரெயில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரை-புனலூர் ரெயில் இருமார்க்கங்களிலும் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-திருவனந்தபுரம், கன்னியாகுமரி-புனலூர், கொல்லம்-கன்னியாகுமரி ஆகிய பயணிகள் மற்றும் மெமு ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் ரத்தாகின்றன.
பெங்களூரு-கன்னியாகுமரி ரெயில் நாளை ஒரு மணிநேரம் தாமதமாக வரும். மங்களூரு-கன்னியாகுமரி ரெயில் இன்றும், நாளையும் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். புனே-கன்னியாகுமரி ரெயில் இன்று திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக நாளை முதல் 3 நாட்கள் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். நெல்லை-பிலாஸ்பூர் ரெயில் நாளை நாகர்கோவில் டவுண் மற்றும் திருவனந்தபுரம் செல்லாமல் தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக திருப்பி விடப்படும். நெல்லை-ஜாம்நகர் ரெயில் நாளை மறுநாள் தென்காசி, புனலூர் வழியாக திருப்பிவிடப்படும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.