சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் குழுவின் பணிகளை முடித்துவைத்து சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருக்கிறது. கிரானைட் கொள்ளை குறித்த சகாயம் விசாரணைக் குழுவைக் கலைப்பதில் காட்டிய ஆர்வத்தை, அந்த கொள்ளை குறித்த சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மதிப்பதில் தமிழக அரசு காட்ட மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து மட்டும் தான் சகாயம் குழு விசாரணை நடத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதைவிட 10 மடங்கு அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்றிருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிரானைட் கொள்ளை பெருமளவில் நடைபெற்றுள்ளது.
இந்த கொள்ளைகள் குறித்து தமிழகம் தழுவிய அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அதற்குக் காரணம், கிரானைட் கொள்ளையில் இந்நாள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பது தான்.
இவை ஒருபுறமிருக்க, இந்த விஷயத்தில் தமிழக அரசின் ஒப்புதலுக்காக கோர்ட்டு காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில், சகாயம் விசாரணைக்குழுவை அமைத்ததே ஐகோர்ட்டு தான். அந்த வகையில், தமிழக அரசின் சம்மதத்துக்காக காத்திராமல் மதுரையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.