தமிழக செய்திகள்

வரைவு வாக்காளர் பட்டியல்: முதல்-அமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

சென்னையில் மொத்தம் 29 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை,

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்டார்.

சென்னை

சிறப்பு சுருக்க திருத்த முறைக்கு பின்பு சென்னையில் மொத்த வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:-

மொத்த வாக்குச்சாவடிகள் - 4,071

மொத்த வாக்காளர்கள் - 29,14,908

ஆண் வாக்காளர்கள்- 14,04,968

பெண் வாக்காளர்கள் 15,09,040

மூன்றாம் பாலினத்தவர்கள்- 900

பெண் வாக்காளர்கள் அதிகம்

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது:-

சென்னையில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் ஆகும். 18 முதல் 19 வரையிலான இளம் வாக்காளர்கள் 46 ஆயிரத்து 200 பேரும். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28 ஆயிரத்து 189 பேரும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில் 12 ஆயிரத்து 805 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறப்பு சுருக்க திருத்த முறைக்கு முன்பு 4,079 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 4,071 வாக்குச்சாவடிகளாக குறைந்துள்ளன. குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகமும், அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக பெரம்பூரும் (முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்ற தொகுதி) இடம்பெற்றுள்ளன.

துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரத்து 852 வாக்காளர்களும், பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 139 வாக்காளர்களும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. - தி.மு.க.

வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி கமிஷனர் வெளியிடுவதற்கு முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், 'இந்த வரைவு வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு தீவிர திருத்தம்) அடிப்படையில் வெளியிடப்படுகிறதா? அல்லது சாதாரண முறையில் வெளியிடப்படுகிறதா? என்பதை விளக்க வேண்டும்' என்றார்.

மேலும், இந்த வரைவு பட்டியலை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்போது எஸ்.ஐ.ஆரை ஏற்றுக்கொண்டதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதே கருத்தை பா.ஜனதா நிர்வாகி எஸ்.கே.ராதாகிருஷ்ணனும் வலியுறுத்தினார்.

தி.மு.க. சார்பில் வக்கீல் சந்துரு. 'எஸ்.ஐ.ஆரை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறோம்' என்றார். காங்கிரஸ் சார்பில் வக்கீல் நவாஸ், வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டதற்காக எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கிறோம் என எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என கூறினார்.

தி.மு.க. வெளிநடப்பு

இவ்வாறு ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சமீரன், அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

இருந்தபோதிலும், தி.மு.க.வினர் வரைவு பட்டியலை பெற்றுக்கொள்ள மறுத்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். முன்னாள் எம்.எல்.ஏ. விருகை வி.என்.ரவி, இந்திய கம்யூனிஸ்டு வெங்கடேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கார்த்திக், தே.மு.தி.க.முருகன், ஆம் ஆத்மி நடராஜ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பெயர் சேர்க்க 3 நாட்கள் சிறப்புமுகாம்

அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 21, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியுடைய வாக்காளர்கள், 1.1.2027 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது நிறைவடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 4.1.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

SCROLL FOR NEXT