சென்னை,
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் 23.2.2026 அன்று வெளியிடப்பட்டது. 15.3.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரத்து 979 (ஆண் வாக்காளர்கள் 2.78 கோடி, பெண் வாக்காளர்கள் 2.90 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 7,656). அதன் பின்னரும் வாக்காளர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிந்து, அதன் அடிப்படையில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் (எஸ்.எஸ்.ஆர்.) தொடங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.
இந்தநிலையில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அது பற்றிய விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற இடங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
* சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. எஸ்.ஐ.ஆர்-க்கு பின் சுமார் 84,000 பேர் சேர்க்கப்பட்டு 29,14,908-ஆக உயர்ந்துள்ளது.
ஆண் வாக்காளர்கள்: 14,04,968
பெண் வாக்காளர்கள்: 15,09,040
மாற்று பாலினத்தவர்: 900
மொத்த வாக்காளர்கள்: 29,14,908
அதிகமான வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் - 2,28,139
குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி துறைமுகம் - 1,20,852
வாக்குச்சாவடி எண்ணிக்கை:
வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு முன் - 4079
மறு சீரமைப்பிற்குப்பின் - 4071
* தருமபுரி மாவட்டத்தில் 12,59,510 வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் கூறியுள்ளார்.
* சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.