சென்னை,
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டி யல் 23.2.2026 அன்று வெளியிடப்பட்டது. 15.3.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரத்து 979 (ஆண் வாக்காளர்கள் 2.78 கோடி, பெண் வாக்காளர்கள் 2.90 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 7,656). அதன் பின்னரும் வாக்காளர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிந்து, அதன் அடிப்படையில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் (எஸ்.எஸ்.ஆர்.) தொடங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 1.1.2027 தேதியை வாக்காளராக தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் கடந்த 2-ந்தேதி முடிவடைந்துவிட்டன. புதிய வாக்குச்சாவடிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளன. அது பற்றிய விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுவார். சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற இடங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளி யிடுவார்கள். இன்று காலை 10 மணிக்கு மேல் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
வரைவுப் பட்டியலில் வெளியானதும் வாக்காளர் ஒவ்வொருவரும் தங்களின் பெயர் இருக்கிறதா? சரியாக இருக்கிறதா? என்பது போன்ற அனைத்து விவரங்களையும் சரிபார்க்கலாம். அதோடு, புதிதாக பெயர் சேர்த்தல், இடம் மாற்றம், பெயர் நீக்குதல் போன்றவற்றுக்காக விண்ணப்பிக்கலாம். அதற்கு டிசம்பர் 11-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28-ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.