வேலூர்,
வேலூர் அருகே டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து வேலூர் வழியாக திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை வெங்கடேஷ்ராஜூ என்பவர் ஓட்டிச்சென்றார். வேலூரை அடுத்த செதுவாலை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் வந்தபோது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்தை இயக்க முடியாமல் இருக்கையிலேயே சரிந்தார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சாலையில் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதற்கிடையே பேருந்து சாலையின் நடுவே (சென்டர் மீடியன்) உள்ள இரும்பு தடுப்பு கம்பியில் மோதி நின்றது. பேருந்தின் பின்னால் மற்றும் எதிர்திசையில் அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். வலிப்பால் துடித்து கொண்டிருந்த வெங்கடேஷ்ராஜூவை உடனடியாக பயணிகள் மீட்டு ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தேசிய நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பின்னர் பயணிகளை வேறு அரசு பேருந்தில் திருப்பத்தூருக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிரேன் மூலம் பேருந்தை அங்கிருந்து அகற்றினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.