சென்னை,
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி திராவிடர் கழகம் சார்பில் நாளை (16.5.2026) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவக் கல்லிவக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் “நீட்” என்ற தேர்வை மத்திய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை மத்திய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த அண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது.
எனவே, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “திராவிடர் கழகம்” 16.05.2026 அன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்” நடத்திட உள்ளதை தி.மு.கழகம் வரவேற்பதோடு,
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.