தமிழக செய்திகள்

சென்னையில் 3 மண்டலங்களில் அக்.10-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

அவசரத் தேவைகளுக்கு பொதுமக்கள் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை:

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னையின் தெற்கு பகுதிகளில் சில இடங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

அதன்படி, அக்டோபர் 10-ந்தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 11-ந்தேதி காலை 9 மணி வரை 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

இதனால் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர்கார்டன், ஆர்.கே. மடம் தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மேலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வெட்டுவாங்கேணி, செம்மஞ்சேரி, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

பராமரிப்புப் பணிகள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் இந்த குடிநீர் விநியோகத் தடையை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு பொதுமக்கள் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT