தூத்துக்குடி,
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாநகரில் வருகிற 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களாக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு மின் விநியோகம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணைமின் நிலையத்தில், வருகிற 16.6.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்பதால், தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும். எனவே தூத்துக்குடி மாநகர பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்னதாகவே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.