போலீசார்-ஓட்டுநர் 
தமிழக செய்திகள்

மதுபோதையில் பென்ஸ் காரை ஓட்டி விபத்து: போலீசாரிடம் அட்ராசிட்டி செய்த ஓட்டுநர்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை ஆலந்தூர் பகுதியில் மதுபோதையில் அதிவேகமாக பென்ஸ் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஒருவர், போலீசாருடன் நடுரோட்டில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தும் பொதுமக்களின் ஆக்ரோஷமும்

சென்னை ஆலந்தூர் பகுதியில் இன்று (சனிக்கிழமை) சொகுசு பென்ஸ் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த கார் விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த நபர் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். விபத்தையடுத்து, அங்கு கூடிய பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு அந்த போதை ஓட்டுநரை தப்பியோட விடாமல் மடக்கிப் பிடித்தனர். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரிடம் அட்ராசிட்டி

போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முயன்றபோது, போதை தலைக்கேறியிருந்த ஓட்டுநர் சிறிதும் அச்சமின்றி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் துவங்கினார். "எதுக்கு நான் பொறுக்கணும்? இதுக்கு மேல பொறுக்க முடியாது.. அதான் என் வண்டி இருக்குல்ல, நான் கிளம்புறேன்.. நீங்களே கார சரி பண்ணி கொடுங்க" என்று போலீசாரை ஒருமையில் மிரட்டும் தொனியில் அட்ராசிட்டி செய்தார்.

வைரலாகும் வீடியோ

பொதுமக்கள் மற்றும் போலீசாரை மதிக்காமல், விபத்தை ஏற்படுத்திவிட்டு தனக்கே கார் பழுது நீக்கித் தர வேண்டும் எனக் கூறிய அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT