தமிழக செய்திகள்

போலீசார் கைது செய்ய சென்றபோது 3 வது மாடியில் கீழே விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு

நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தும் காவல்துறையினர் அத்துமீறியதாக ராஜபாண்டியனின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

போலீசார் கைது செய்ய சென்றபோது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

சென்னை புழல் அருகே கதிர்வேடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன், செங்கல்பட்டு வணிக வரித்துறை அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் 37 வயது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புழல் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் கைது செய்வதற்காக ராஜபாண்டியனின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது போலீசாருக்கு பயந்து அவர் தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். போலீசார் மேலே வந்தால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக மாடிக்கு 2 போலீசார் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ராஜபாண்டியன் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், அவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது.

பின்னர், போலீசார் ராஜபாண்டியனை மீட்டு கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தும் காவல்துறையினர் அத்துமீறியதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து புழல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT