தமிழக செய்திகள்

காட்டு யானையை அச்சுறுத்திய டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

சரக்கு மற்றும் காய்கறி லாரிகளை குறிவைத்து யானை வழிமறித்து வருகிறது.

நீலகிரி,

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலை நடுவே வந்து நிற்கிறது. பின்னர் சரக்கு மற்றும் காய்கறி லாரிகளை குறிவைத்து யானை வழிமறித்து வருகிறது. காய்கறி போன்ற உணவு பொருட்களின் வாசனையை நுகர்ந்து, துதிக்கையை நீட்டி உணவு பொருட்களை எடுத்து உண்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால் வாகன டிரைவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று. திடீரென காட்டு யானை மீது மோதுவது போல் சென்றது. அதன் டிரைவர் வேகத்தை குறைக்காமல், யானை மீது வேகமாக வந்து மோதுவது போல் லாரியை ஓட்டி சென்றார். இதை பார்த்த காட்டு யானை சற்று மிரண்ட படி பின்னோக்கி சென்றது. மேலும் காட்டு யானை சுதாரித்து கொண்டு சாலையோரம் நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

டிரைவர் கைது

சரக்கு லாரியை டிரைவர் அபாயகரமாக ஓட்டியதை கண்டு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சியை செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பக வனச்சரக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் காட்டு யானையை அச்சுறுத்தும் வகையில், ஆபத்தான முறையில் லாரியை ஓட்டியதாக கேரளம் மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஜின்ஷாத் (வயது 46) என்பவரை கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. வாகனங்களை மெதுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்தனர். பின்னர் லாரி டிரைவர் ஜின்ஷாத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT