நெல்லை,
அரசு பேருந்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை நகரில் நேற்று முன் தினம்(திங்கட்கிழமை) இரவு மகளிருக்கான இலவசப் பேருந்து ஒன்று வழக்கோடை பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பேருந்தில் ஏற முயன்றபோது, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் செல்ல முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஒரு பெண்ணின் கணவர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஓட்டுநரை நோக்கிச் சென்று, அரசுப் பேருந்தை முன்னால் நகர்த்த விடாமல் மறித்தனர். இரவு நேரத்தில் பெண்களை ஏற்றாமல் செல்வது முறையா என்று ஓட்டுநரிடம் அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுநரின் வீடியோ வைரலானது. இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து ஓட்டுநர் சங்கர கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.