தமிழக செய்திகள்

அரசு பஸ்சை தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய டிரைவர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை

சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த விழாவில் பங்கேற்றுவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் பஸ்சை இயக்கி ராமேசுவரம் வந்ததாக தெரிகிறது.

ராமேசுவரம்,

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெளியூர்களில் இருந்து பஸ்களில் வரும் பயணிகள் மற்றும் பக்தர்களை பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பணியிடை

அதில் ஒரு டவுன் பஸ்சின் டிரைவராக வேலை பார்த்து வருபவர், ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 52). நேற்று முன்தினம் மாரிமுத்து தன்னுடன் பணிபுரியும் ஒருவரின் வீட்டு விழாவுக்கு செல்வதற்காக அந்த அரசு பஸ்சை ஓட்டியபடி ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த விழாவில் பங்கேற்றுவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் பஸ்சை இயக்கி ராமேசுவரம் வந்ததாக தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து டிரைவர் மாரிமுத்து மீது விசாரணை நடத்தப் பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நடவடிக்கை

இதுகுறித்து ராமேசுவரம் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் கூறுகையில், "டிரைவர் மாரிமுத்து சம்பவத்தன்று தனது வேலையை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் தன்னுடன் பணிபுரியும் ஒருவரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். பஸ்சில் எந்த பயணியும் இல்லை. 10 நிமிடத்தில் மீண்டும் பஸ்சை ஓட்டியபடி ராமேசுவரம் வந்து வழக்கமான பணியை தொடங்கி விட்டார். இருப்பினும் தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றதால் டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்”. என கூறினார்.