தமிழக செய்திகள்

கிராமங்களின் தேவைகளை கண்டறிய டிரோன் வசதி: அமைச்சர் ஆனந்த் தகவல்

நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம் என தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

சென்னை,

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டிரோன் மூலம் கிராமங்களுக்கு தேவையானதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

மண்டல மாநாடு

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் "வெற்றித் தமிழகம்- தொலைநோக்கு ஆவணம் செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்" தொடர்பான முதல் மண்டல மாநாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சித் துறை அதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேச்சு

இந்த மாநாட்டில் அமைச்சர் ஆனந்த் பேசுகையில், "நமது துறை சார்பில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிடம் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி கேட்டிருக்கிறோம். 60:40 என்ற விகிதத்தில் இல்லாமல், அந்த நிதியை முழுவதுமாக சம்பந்தப்பட்ட நிறுவனமே செலவு செய்யட்டும். நீங்கள் அவர்கள் செலவு செய்யும் திட்டப்பணிகளை மட்டும் மேற்பார்வையிட வேண்டும். இந்த விவகாரத்தில் பழைய காலங்களில் நிறைய தவறுகள் நடந்திருக்கின்றன. இனி வரும் காலங்களில் அது நடக்கக்கூடாது. நடக்கவும் விடமாட்டோம்.

கிராமங்களின் தேவைகளை கண்டறிய டிரோன் வசதி

நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டிரோன் மூலம் கிராமங்களுக்கு தேவையானதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். எந்த இடத்தில் சாலை வசதி இல்லை?. எந்த இடத்தில் தூர்வார வேண்டும்? உள்ளிட்ட தேவைகளை இதன் மூலம் அறியலாம்" என்றார்.

SCROLL FOR NEXT