சென்னை,
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறை அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்படி கடந்த மே 28-ந்தேதி முதல் ஜூன் 10-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நடந்த சோதனைகளில் இதுவரை 1,328 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 17 வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் சரித்திர பதிவேடு ரவுடிகள், சமூக விரோதிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை மாநிலம் முழுவதும் தீவிர சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், காவல்துறை தலைமை இயக்குனராக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்ற பின்பு, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அமலாக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை சரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.