தமிழக செய்திகள்

போதை மாத்திரைகள் விற்பனை: 3 பேர் அதிரடி கைது

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை,

போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரைகள் விற்பனை

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள அம்மாநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பூந்தமல்லி காவல் நிலைய சட்ட ஒழுங்கு போலீஸ்காரர் விஜய ராகவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்னை பூந்தமல்லி அம்மாநகர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், ராஜ்குமார் மற்றும் சபரி என்பது தெரியவந்தது. அவர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT