கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை? - சோதனை நடத்த மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை உத்தரவு

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும், போதைப்பொருளை சமூக ரீதியாக கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர் எஸ்.பி.கார்த்திகா போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக கண்டிப்புடன் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து கலால் வரித்துறை துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதே சுற்றறிக்கை மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எஸ்.பி.கார்த்திகா அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

”* பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், போக்குவரத்து முனையங்கள் உள்பட பல்வேறு இடங்களின் அருகாமையில் போதைப்பொருள், போதை வஸ்துக்கள், சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை மற்றும் வினியோகம் நடைபெறுகிறதா? என்று தொடர்ந்து சோதனை நடத்தி கண்காணிக்கவேண்டும்.

* அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், குடியிருப்பு நலச்சங்கங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் உள்ளூர் மட்டத்தில் ரகசிய தகவல் வழங்குனர் (இன்பார்மர்) வலையமைப்பை உருவாக்கி, போதைப்பொருள் வினியோக கட்டமைப்பை கண்டறியவேண்டும்.

* சட்டவிரோத, போலி மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறும் அபாயப் பகுதிகளை கண்டறிந்து சோதனைகள் மேற்கொள்ளவேண்டும்.

* சட்டவிரோத மதுபானங்கள், போதைப்பொருள்கள் உற்பத்தி, கடத்தல் மற்றும் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டாஸ்மாக், வனத்துறை, ரெயில்வே போலீஸ் மற்றும் அண்டை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவேண்டும்.

அதிக விலைக்கு விற்கக்கூடாது

* டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கிளப்புகளில் அடிக்கடி மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு விதிமீறல்கள் நடந்தால் கண்டறியவேண்டும்.

* டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டும் இயங்குவதை கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும். அதிகபட்ச சில்லறை விலையை தாண்டி அதிக விலைக்கு விற்பனை செய்யாததையும் உறுதி செய்யவேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவோ, வழங்கவோ கூடாது.

* சட்டவிரோத பார்களை கண்டறிந்து மூடுவதோடு, பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை

* உரிமம் பெற்ற கிளப்புகளில் பார் நடத்துவது ஒரு செயல்பாடாக இருப்பதால், கிளப்புகளின் பிற பொழுதுபோக்கு செயல்பாடுகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

* பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மது மற்றும் போதைப்பொருளின் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். போதை மறுவாழ்வு திட்டங்களை நடத்துவதில் சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இந்த அறிவுறுத்தல்கள் மிகவும் கவனமாக பின்பற்றப்படவேண்டும். அமல்படுத்துவதில் அலட்சியம் அல்லது கடமையை செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.