போதைப்பொருள் 
தமிழக செய்திகள்

நாகப்பட்டினத்தில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது

தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 137 கிலோ கிராம் ஆகும்.

சென்னை,

தமிழ்நாட்டில் 137 கிலோ எடையுள்ள, ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரைக்கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

137 கிலோ கிராம் போதைப்பொருள்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்திலிருந்து, தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 137 கிலோ கிராம் ஆகும்.

சோதனை நடவடிக்கை

உளவு தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2026 அக்டோபர் 16, 17 தேதிகளில் தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் மூலம், போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு கடலோர போதைப்பொருள் கடத்தல் கும்பலை அவர்கள் வெற்றிகரமாக கண்டுபிடித்தனர். இந்த போதைப் பொருள், கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்தது. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மெத்தம்பெட்டமைன்

அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளித் தகடு பொட்டலங்கள் அடங்கிய ஆறு டபிள் பைகள் மீட்கப்பட்டன . அந்த பொட்டலங்களில், மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் ஒரு வெள்ளை நிற படிக பொருள் இருந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சந்தேகத்திற்குரிய நபரின் இடத்தில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என சந்தேகிக்கப்படும் ரூ.10 லட்சம் ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நான்கு நபர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT