தமிழக செய்திகள்

வேலூரில் மது போதையில் ஆட்டோ ஓட்டியவர் விபத்தில் சிக்கி பலி!

விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (40) ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் சவாரி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஆட்டோ விபத்து

அப்போது அவர் மது அருந்திய நிலையில் ஆட்டோவை இயக்கியதாக கூறப்படுகிறது. கரடிகுடி அருகே பூஞ்சோலை பகுதியில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து கிடந்த அவரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.