கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், 22 வயது இளைஞர் சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 22). இவரும் இவருடைய நண்பரான அதே பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22) மற்றும் மற்றொரு 16 வயது சிறுவனும் இணைந்து, கிணத்துக்கடவு பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது. இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும், தங்களது கைவசம் வைத்திருந்த சுத்தியல் மற்றும் கத்தியை எடுத்து அஸ்வினை கொடூரமாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட மதுபோதை தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.